Tuesday, January 3, 2017

தோரண கணபதி

நாரணன் நான்முகன் ஈசனும் போற்றிடும்
நல்லானைப் பாடுகின்றோம் – வெள்ளை
வாரணன் சந்திரன் தேவர்கள் வணங்கும்
வல்லபம் காணுகின்றோம்
காரணப் பொருளை கருணை பெருக்கும்
களிற்றினைப் போற்றுகின்றோம்
தோரண கணபதி தூயனாம் குணநிதி
துணைவர வேண்டுகின்றோம்!

கணபதி சரணமே!

சிங்கார வேலவனின் அன்பு மூத்தோனே
ஆங்கார வினையெலாம் அழித்து அருள்வாயே - வண்டின்
ரீங்கார ஒலிசூழ் ஆதனூர் தனில்வாழும்
ஓங்கார வடிவே கணபதி சரணமே

மூத்தோனே,  முதல்வி மணிக்கரம் தனிலே
பூத்தோனே, வள்ளி வேலோனைச் சேரப்
பார்த்தோனே, பாவியாம் என்னைப் பரிவுடனே
காத்தோனே, கணபதி, கழல்களே சரணமே

சக்கரக் கையனின் சகோதரி புதல்வா
முக்கண் ஈசர்க்கும் தேவர்க்கும் முதல்வா
எக்கணமும் எமைக் காப்போய் சரணமே
விக்கினம் நீக்கும் விநாயக சரணமே

சிறுத்த மூஞ்சூறு சிகரத்தைத் தாங்கியது – என்
கருத்துன் பாதமாம் கமலத்தைத் தேடியது
வருத்தமும் பசிநோயும் பூதியால் போக்கிடும்
பருத்த வயிறோனே, பாதங்கள் சரணமே!